Sunday 17 February 2019

காந்தளின் சிறப்புகள்


                கார்த்திகை மாதங்களில் பற்றிப் படர்ந்து தன் நீளிதழ்கள் விரித்துத் தீச் சுவாலையென மலர்ந்திருக்கும் காந்தள் மலர்கள் அக்காலத்திலும் இக்காலத்திலும் தமிழர் வாழ்வியலோடு கலந்திருந்து ஏதோவொரு வகையில் அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாடாய்த் தன்னை அடையாளப்படுத்தி நிற்கின்றதென்பது மறு(றை)க்க முடியாத உண்மையாகும்.இது பச்சை, வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு என வண்ணங்களின் கலவையாய் எண்ணங்களின் வெளிப்பாடாய் மலர்ந்திருந்து எக்காலத்திலும் பார்ப்போரை வியக்க வைக்கும் பேராற்றல் கொண்ட மலராகும்.
         
                  காந்தள் மலரானது ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய “லில்லி ஆசியே” எனப்படும் வகையினைச் சேர்ந்ததாகும். இம்மலரானது  அறிவியல் மொழியில் "குளோரியோசா சுப்பர்பா" என அழைக்கப்படுகின்றது. "குளோரியோசா” என்பது கண்களைக் கவரக்கூடியது எனவும் “சுப்பர்பா” என்பது சிறப்பானது எனவும் பொருள் கொள்ளப்படுகின்றது. அதனடிப்படையில் கண்களைக் கவரக்கூடிய அதியுச்ச அழகினைக் கொண்ட மலரெனப் பொருள்படும். இதன் பொருளையே கிராமத்து வழக்கத்தில் " கண்வலிப்பூ" என்ற மற்றொரு பெயர் கொண்டுள்ளது. அதாவது கண் வலிக்கும் அளவிற்குக் கண்கொட்டாமல் பார்க்கக்கூடிய அழகினை உடையது என்பது இதன் பெயர்காரணமாகும்.
 

                காந்தள் மலரானது ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் வெப்ப மண்டலப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. ஆப்பிரிக்கா நாடுகளான எதியோப்பியா, சோமாலியா, சூடான், கென்யா, தன்சானியா, உகண்டா, செனகல், மொசாம்பிக், போட்சுவானா, நம்பியா, சுவாசிலாண்ட், தென்னாபிரிக்கா, மடகசுகார் மற்றும் ; இந்தியத் துணைக்கண்டமான இலங்கை, இந்தியா, நேபாளம் மற்றும் ; தென்சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா, லாயோசு, மியான்மார், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது.

சிறப்புத் தகவல்கள்
காந்தள் இனங்களில் ஒன்றான குளோரியோசா ரோத்சில்டியானா என்ற பூவினையே ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாப்வே தனது நாட்டுப் பூவாகக் கொண்டிருக்கின்றது.

 காந்தள் தமிழீழத்தின் நாட்டுப் பூவாகவும், தமிழ் நாட்டின் மாநிலப் பூவாகவும் அடையாளத்தப்படுகின்றது.

பண்டைய மருத்துவத்திலும் நவீன மருத்துவத்திலும் காந்தள் பயன்படுத்தப்படுகின்றது. பண்டைய மருத்துவத்தில் காந்தள் வெண்தோண்டி என அழைக்கப்பட்டது.

காந்தளின் மற்றைய பாகங்களை விடக் கிழங்கில் அதிக கோல்சிசின் இருப்பதால் கிழங்கை உட்கொண்டால் இறப்பு நேர்கின்றது. பிற பாகங்களை நேரடியாக உட்கொள்வதால் முடி கொட்டுதல் உள்ளிட்ட பாதிப்புகள் நேரிடும். இறப்பை விளைவிக்கும் இக் கோல்சிசின் பாரம்பரிய மற்றும் நவீன மருத்து முறையின் அருமருந்தாகும். "சுபர்பின்", "கோல்சிசின்", "கோல்ச்சிகோசைடு" என்னும் மருந்துப் பொருட்கள் இதன் கிழங்கு மற்றும் விதைகளில் இருப்பதால் இது இன்று வணிக ரீதியில் சாகுபடி செய்யப்படுகின்றது.

"ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்" என்று சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான பட்டினப்பாலை சிறப்பித்துக் கூறும் ஈழத் திருநாட்டில் இன்றும் மண்ணிற்காய் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் காந்தள் மலரே பயன்படுத்தப்படுகின்றது. இறந்தவர்களை நினைவுகூரும் மதிப்பிற்குரிய நாளில் பயன்படுத்தப்படும் அதியுயர் சிறப்பினைக் காந்தள் கொண்டுள்ளது.

1947 ஆம் ஆண்டில், தற்போது சிம்பாப்வே என்றழைக்கப்படுகின்ற ரொதேசியாவிற்கு பயணித்தபோது அரசி எலிசபெத் II அவர்களது இருபத்தோராவது பிறந்தநாளுக்கு இந்த மலரின் வடிவத்தில் ஒரு வைர ஆடையூசி பரிசளிக்கப்பட்டது. 1953ஆம் ஆண்டு இராணி எலிசபெத் மற்றும் இளவரசி மார்கரெட் ஆகியோர் பொதுநலவாய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான காந்தள் மலர்த் தோற்றம் கொண்ட ஆடையூசிகள் வழங்கப்பட்டன.
                   
ரொதேசியா மற்றும் நியாசலாண்ட் ஆகியவற்றின் கூட்டமைப்பு நாணயத்திலும், ரொதேசியா மற்றும் நியாசலாண்ட் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரிவுக்குப் பின்னர் ரொதேசியா வெளியிட்ட நாணயத்திலும் காந்தள் மலரானது இடம்பெறுகின்றது. ரொதேசியா சிம்பாப்வேயாக மாற்றம் பெற்ற பின்னர் வெளியிடப்பட்ட  நாணயத்தில் காந்தள் இலைகள் கொடியோடு இடம்பெறுகின்றது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட அந்நாட்டுப் பணத் தாள்களிலும் காந்தள் மலரானது இடம்பெறுகின்றது.

•இந்தியா, சிம்பாப்வே, கபோனிசு, ரோதேசியா,அமெரிக்கா, நமீபியா, காம்பியா, உகாண்டா, தாய்லாந்து, மலேசியா, ருவாண்டா, செனகல்,மத்திய ஆப்பிரிக்கா, கேமரூன், இந்தோனேசியா, காங்கோ, சுவாசிலாந்து, கேபனோசியா, அங்கோலா,சாம்பியா, மாலைதீவு, மொசாம்பிக், வியட்நாம், நாம்பியா, கினியா, மாலி, பிரான்சு, புருண்டி ஆகிய நாடுகள் தாம் வெளியிட்ட அஞ்சல் தலைகளிலும் காந்தளைப் பொறித்து அழகு பார்த்துள்ளனர்.


மலர்க்கொத்து, ஆடை அணிகலன்கள்,வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றின் தயாரிப்பின் போது காந்தளின் வடிவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

("சங்க இலக்கியங்களில் காந்தள்" என்ற எனது நூலிலிருந்து)

                          -பொலிகையூர் ரேகா

Tuesday 22 January 2019

உங்கள் பிள்ளைகள் நாளை உங்களைக்  கேள்வி கேட்கக்கூடும்!

இன்று பெயர் வைப்பதற்காக ஆலோசனை கேட்பவர்களின்   எதிர்ப்பார்ப்பென்பது நாகரிகமான,புதுமையான பெயர்கள் வேண்டுமென்பதிலேயே இருக்கின்றதே தவிர நம் தமிழ்ப் பண்பாட்டைப் பேணிக் காக்கும் வண்ணம் இல்லையென்பது வருத்தத்திற்குரியதாகும்.

இவர்கள் தேர்ந்தெடுக்கும் பெயர்கள் ஸ,ஷ,ஜ,ஹ,ஸ்ரீ ஆகிய வடமொழி எழுத்துகள் அடங்கிய பெயர்களாகவே இருக்கின்றது.இத்தகைய வடமொழிப் பெயர்களே புதுமையாக இருப்பதாக எண்ணும் பலருக்கு அதன் பொருள் தெரியாமல் போவதுதான் வேதனைக்குரியது. பகட்டாக எண்ணி வைக்கும் பல வடமொழிப் பெயர்களுக்கான தமிழ் அர்த்தம் வேறுவிதமாகவே அமையும்.

அன்று தமிழ்ப் பெயர்கள் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவாக இருந்ததால் பெரும்பாலும் நமது பெயர்கள் தமிழல்லாத பெயர்களாக அமைந்துவிட்டன. அதை மாற்றம் செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் இனிமேல் வைக்கும் பெயர்களையாவது தமிழில் வைக்க வேண்டியது அவசியமானதாகும்.  பிறமொழிப் பெயர்கள் குறித்த தெளிவின்மை காரணமாக நமது குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்கனவே வடமொழி எழுத்துகள் உள்ள பெயரை வைத்துத் தவறிழைத்துவிட்டோம்.அதே தவறை மீண்டும் செய்வதென்பது நம் தாய்த் தமிழுக்கு இழைக்கும் அநீதியாகும்.

காலக் கணிப்பாளர்கள் பலர் குறித்துத் தரும் எழுத்தில்தான் பெயர் வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நாகரிகம் என்றெண்ணிப் பல வடமொழிப் பெயர்களை வைத்துவிட்டு கணிப்பின் மேல் பழி போடுபவர்களும் உள்ளனர். என் பிள்ளை வளர்ந்து வந்து  ஏன் இப்படியொரு பெயரை வைத்தீர்கள் எனக் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக நாகரிகமான பிறமொழிப் பெயரை வைத்தோமென்று கூறுபவர்களும் உள்ளனர்.

இப்போது நீங்கள் வைக்கப்போகும் பெயர்களுக்காகவும் உங்கள் பிள்ளைகள் நாளை உங்களைக்  கேள்வி கேட்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மொழிப்பற்று இளைய தலைமுறையிடத்தில் வளர்ந்துவரும் இந்த நேரத்தில் தமிழல்லாத பெயரைத் தமிழனான எனக்கு ஏன் வைத்தீர்கள் என்ற கேள்வி நாளைய தலைமுறையில் உறுதியாக எழும்.

பிறமொழிப் பெயர்களை வைத்து வரலாற்றுப் பிழைக்குத் தூண்களாகிவிடாதீர்கள்.  நம்மை அழிக்கத் துடிப்பவர்கள்  நடுவில் வேற்றுமொழிப் பெயர்களை வைத்து நம் இனத்தின் அடையாளத்தை நாமே கெடுத்துக்கொள்ள வேண்டாமே!

உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருக்குக் குழந்தை பிறந்தாலும் தமிழ்ப் பெயர் சூட்டுமாறு வலியுறுத்துங்கள்.


உங்கள் உறவுகளுக்கு நீங்கள் வைக்கப்போகும் பெயர்கள் எக்காலத்திலும் அவர்களைத் தமிழன் என்ற உணர்வோடு தலை நிமிரச் செய்வதாய் இருத்தல் வேண்டும்.

பெயர் சொல்லி அழைக்கும்போது கேட்பவருக்கும், அழைப்பவருக்கும் உளநிறைவு ஏற்பட வேண்டும். அதை விடுத்து வாயில் நுழையாத பெயர்களை வைப்பதில் பெருமை எதுவுமில்லை.  பெயர் என்பது பண்பாட்டின் குறியீடாக  இருத்தலே  பெயருக்கும், பெயரைக் கொண்டிருப்பவருக்கும் அழகு.

பிறமொழியில் பெயர் வைத்து உங்கள் பிள்ளைகளின் பெருமையைக் குறைத்துவிடாதீர்கள்.நம்  அடையாளங்கள்  தமிழ்ப் பண்பாடாகவே தொடரட்டும். தமிழ்ப் பெயரென்பது தமிழனின் அடையாளம். தாய்த் தமிழையும் சேர்த்துப் பெயராய் வைத்த பெருமை கொண்ட இனம் எமது. பிறமொழிப் பெயரால் எம் சந்ததிகளைத் தலைகுனிய வைக்க வேண்டாம். என்றும் தமிழோடு  நாம் வாழ்வோம்.

     - பொலிகையூர் ரேகா
B.com.,M.com.,M.Phil.,MBA.,M.Phil.,

காந்தளின் சிறப்புகள்                 கார்த்திகை மாதங்களில் பற்றிப் படர்ந்து தன் நீளிதழ்கள் விரித்துத் தீச் சுவாலையென மலர்ந்திருக்கும...