Tuesday 22 January 2019

உங்கள் பிள்ளைகள் நாளை உங்களைக்  கேள்வி கேட்கக்கூடும்!

இன்று பெயர் வைப்பதற்காக ஆலோசனை கேட்பவர்களின்   எதிர்ப்பார்ப்பென்பது நாகரிகமான,புதுமையான பெயர்கள் வேண்டுமென்பதிலேயே இருக்கின்றதே தவிர நம் தமிழ்ப் பண்பாட்டைப் பேணிக் காக்கும் வண்ணம் இல்லையென்பது வருத்தத்திற்குரியதாகும்.

இவர்கள் தேர்ந்தெடுக்கும் பெயர்கள் ஸ,ஷ,ஜ,ஹ,ஸ்ரீ ஆகிய வடமொழி எழுத்துகள் அடங்கிய பெயர்களாகவே இருக்கின்றது.இத்தகைய வடமொழிப் பெயர்களே புதுமையாக இருப்பதாக எண்ணும் பலருக்கு அதன் பொருள் தெரியாமல் போவதுதான் வேதனைக்குரியது. பகட்டாக எண்ணி வைக்கும் பல வடமொழிப் பெயர்களுக்கான தமிழ் அர்த்தம் வேறுவிதமாகவே அமையும்.

அன்று தமிழ்ப் பெயர்கள் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவாக இருந்ததால் பெரும்பாலும் நமது பெயர்கள் தமிழல்லாத பெயர்களாக அமைந்துவிட்டன. அதை மாற்றம் செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் இனிமேல் வைக்கும் பெயர்களையாவது தமிழில் வைக்க வேண்டியது அவசியமானதாகும்.  பிறமொழிப் பெயர்கள் குறித்த தெளிவின்மை காரணமாக நமது குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்கனவே வடமொழி எழுத்துகள் உள்ள பெயரை வைத்துத் தவறிழைத்துவிட்டோம்.அதே தவறை மீண்டும் செய்வதென்பது நம் தாய்த் தமிழுக்கு இழைக்கும் அநீதியாகும்.

காலக் கணிப்பாளர்கள் பலர் குறித்துத் தரும் எழுத்தில்தான் பெயர் வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நாகரிகம் என்றெண்ணிப் பல வடமொழிப் பெயர்களை வைத்துவிட்டு கணிப்பின் மேல் பழி போடுபவர்களும் உள்ளனர். என் பிள்ளை வளர்ந்து வந்து  ஏன் இப்படியொரு பெயரை வைத்தீர்கள் எனக் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக நாகரிகமான பிறமொழிப் பெயரை வைத்தோமென்று கூறுபவர்களும் உள்ளனர்.

இப்போது நீங்கள் வைக்கப்போகும் பெயர்களுக்காகவும் உங்கள் பிள்ளைகள் நாளை உங்களைக்  கேள்வி கேட்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மொழிப்பற்று இளைய தலைமுறையிடத்தில் வளர்ந்துவரும் இந்த நேரத்தில் தமிழல்லாத பெயரைத் தமிழனான எனக்கு ஏன் வைத்தீர்கள் என்ற கேள்வி நாளைய தலைமுறையில் உறுதியாக எழும்.

பிறமொழிப் பெயர்களை வைத்து வரலாற்றுப் பிழைக்குத் தூண்களாகிவிடாதீர்கள்.  நம்மை அழிக்கத் துடிப்பவர்கள்  நடுவில் வேற்றுமொழிப் பெயர்களை வைத்து நம் இனத்தின் அடையாளத்தை நாமே கெடுத்துக்கொள்ள வேண்டாமே!

உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருக்குக் குழந்தை பிறந்தாலும் தமிழ்ப் பெயர் சூட்டுமாறு வலியுறுத்துங்கள்.


உங்கள் உறவுகளுக்கு நீங்கள் வைக்கப்போகும் பெயர்கள் எக்காலத்திலும் அவர்களைத் தமிழன் என்ற உணர்வோடு தலை நிமிரச் செய்வதாய் இருத்தல் வேண்டும்.

பெயர் சொல்லி அழைக்கும்போது கேட்பவருக்கும், அழைப்பவருக்கும் உளநிறைவு ஏற்பட வேண்டும். அதை விடுத்து வாயில் நுழையாத பெயர்களை வைப்பதில் பெருமை எதுவுமில்லை.  பெயர் என்பது பண்பாட்டின் குறியீடாக  இருத்தலே  பெயருக்கும், பெயரைக் கொண்டிருப்பவருக்கும் அழகு.

பிறமொழியில் பெயர் வைத்து உங்கள் பிள்ளைகளின் பெருமையைக் குறைத்துவிடாதீர்கள்.நம்  அடையாளங்கள்  தமிழ்ப் பண்பாடாகவே தொடரட்டும். தமிழ்ப் பெயரென்பது தமிழனின் அடையாளம். தாய்த் தமிழையும் சேர்த்துப் பெயராய் வைத்த பெருமை கொண்ட இனம் எமது. பிறமொழிப் பெயரால் எம் சந்ததிகளைத் தலைகுனிய வைக்க வேண்டாம். என்றும் தமிழோடு  நாம் வாழ்வோம்.

     - பொலிகையூர் ரேகா
B.com.,M.com.,M.Phil.,MBA.,M.Phil.,

No comments:

Post a Comment

காந்தளின் சிறப்புகள்                 கார்த்திகை மாதங்களில் பற்றிப் படர்ந்து தன் நீளிதழ்கள் விரித்துத் தீச் சுவாலையென மலர்ந்திருக்கும...